Monday, January 7, 2013

கிருஷ்ண சபாவில் டேனி


சனிக்கிழமை மாலை.

டேனி காலையிலிருந்து  சும்மா டிவி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்த போது எதிர் வீட்டில் அந்தத் தகவலைச் சொன்னார்கள்.

ரெண்டு தெரு தள்ளி கிருஷ்ண சபாவில் பாகவத வகுப்புகள் எடுப்பதாகவும் இன்று ஏதோ பாடகர் வந்திருப்பதால் இன்று பேச்சும் பாட்டுமாய் அட்டகாசமாய் இருக்கும் என்றும் சொல்ல....

வெட்டியாய் டிவி பார்ப்பதற்கு இது உபயோகமாய் இருக்குமே என்று டேனியை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினேன்.

டேனி இதுவரை மேடையில் பாட்டுகள் பாடி பார்த்ததில்லை என்பதால், வரும் வழி பூராவும் எப்படி டிவில வருவது போல் ஆடிக் கொண்டே பாடுவார்களா, யாரு டேன்ஸ் ஆடுவார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தான்.

வந்த இடத்தில் முதல் வரிசையிலேயே இடம் கிடைக்க ஆர்வத்துடன் அமர்ந்த டேனி, பிரசங்கர் பேசப் பேச டென்ஷனாகிப் போனான்.

பிரசங்கர் பாட்டுக்கு முன்னர் கண்ணன் பிறந்தது வளர்ந்தது லீலைகள் எல்லாம் பெரியவர்களுக்கு போல கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலும் சொல்லிக்கொண்டே போக... அசுவாரஸ்யத்துடன் நெளிந்து கொண்டிருந்த டேனி, அவர் பாட ஆரம்பித்ததும் உற்சாகமாகிப் போனான்.

கண்ணன் பாடல்கள் எப்போதும் போல தனி அழகுடன் ஜொலிக்க, பிரசங்கரும் அதை உற்சாகமாய் பாட....  வந்திருந்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷத்துடன் கூடவே சேர்ந்து பாட... டேனியும் அவர்களுடன் ஐக்கியமாகிப் போனான்.

கிடத்தட்ட ரெண்டு மணிநேரம்... போனதே தெரியவில்லை.

எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியிலும்கூட டேனி உற்சாகத்துடன், "ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்..." என்று பாடிக் கொண்டே வர, அவனை நல்ல இடத்திற்கு சந்தோஷத்துடன் கேட்டேன்.

"என்ன டேனி... அந்த அங்கிள் பாடின பாட்டெல்லாம் பிடிச்சிருந்ததா.?".

சந்தோஷமாய் பாடிக் கொண்டே வந்த டேனி...  இப்போது அதை நிறுத்திவிட்டு லேசான அலுப்புடன் சொன்னான்.

"பாட்டெல்லாம் நல்லாத்தாம்மா இருந்துச்சு... ஆனா, அட்வர்டைஸ்மென்ட்தான் ரொம்ப நீளம்.!".
.
.
.